சந்திரயான் விண்கலம் உள்பட 4 ஆயிரம் பொம்மைகளுடன் மெகா கொலு கண்காட்சி: கொளத்தூரில் நேற்று தொடங்கியது

 

பெரம்பூர்: கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 36வது தெருவில் நவராத்திரி கோயில் உள்ளது. இங்கு லட்சுமி, சரஸ்வதி, சக்தி உள்ளிட்ட மூன்று சுவாமிகளின் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழா வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடக்கிறது. எப்பொழுதும் கொளத்தூரில் குறிப்பிட்ட நவராத்திரி கோயிலில் வைக்கப்படும் கொலு மிகவும் பிரசித்திபெற்றது.அதன்படி தற்போது 4000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

மகாபாரதத்தை குறிப்பிடும் பொம்மைகள், முன்னோர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொம்மைகள், இயற்கை உணவு முறையை நினைவுபடுத்தும் பொம்மைகள், பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது.

அதை குறிக்கும் வகையில் ஒருவர் அமர்ந்து விண்கலத்தை இயக்குவது போலவும் ராக்கெட் மேலே சென்றவுடன் லேண்டர் விண்கலம் நிலவில் இறங்குவது போன்றும் தத்ரூபமாக கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவர்கள் பாற்கடலை கடைவது போன்றும் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  32 ஐம்பொன் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்த பொம்மைகள் வரவழைக்கப்பட்டு மெகா கொலு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் பண்டைய உணவு முறை மற்றும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் அவர்களின் ஞாபகத்துக்கு கொண்டு வரவும் மாணவர்களும் கல்வித்திறன் அறிவியல் மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய விளையாட்டு முறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

The post சந்திரயான் விண்கலம் உள்பட 4 ஆயிரம் பொம்மைகளுடன் மெகா கொலு கண்காட்சி: கொளத்தூரில் நேற்று தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: