மக்கள் பார்க்க வசதியாக பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் : சபாநாயகருக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக பேரவைக் கூட்டத் தொடர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பார்த்தால், பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் வெட்கப்படும் அளவில் தான் உள்ளது. ஆளுங்கட்சியினர் துணைக் கேள்வி கேட்பதாக இருந்தால் கூட ஜெயலலிதா, எடப்பாடி, பன்னீர்செல்வம் வரை மூவரையும் போற்றும் புராணங்களை பாடிவிட்டுத் தான் தொடங்குகிறார்கள். இதனால் அவை நேரம் வீணாவதைப் பற்றிக் கவலைப்படாத பேரவைத் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு நிமிடம் கூடுதலாக பேச அனுமதி மறுக்கிறார். முதலமைச்சரான நாளில் இருந்தே தம்மை ஜெயலலிதா ஆக கருதிக் கொள்ளும் பழனிச்சாமி, இப்போது ஜெயலலிதா போலவே மற்ற அமைச்சர்களின் துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே வெளியிடுகிறார். பேரவைக்கென தனியான நாகரிகம் உள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத முதலமைச்சரும், மற்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவதைப் போன்றே முகம் சுளிக்கவைக்கும் மொழிகளில் மிகவும் கொச்சையாக பேசுகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தையும்  முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை ஆகும். பேரவையில் நடப்பதை அவர்கள் பார்த்து தெரிந்து கொண்டால் தான், தாங்கள் சரியான நபர்களைத் தான் தேர்ந்தெடுத்துள்ளோமா என்பது குறித்து தன்னாய்வு செய்து கொள்வதற்கும், அடுத்து வரும் தேர்தலில் சரியான நபர்களை தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அதை செய்ய அரசு  மறுப்பது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் போது உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது ஒருபுறமிருக்க, உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயல்படுவர். எனவே, அடுத்தக் கூட்டத்தொடரிலிருந்தாவது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக அவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: