கோபி அருகே காட்டுப்பன்றிகள் கூட்டம் அட்டகாசம்: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

கோபி: கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக ஆண்டு தோறும் 24,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன வாய்க்கால்களில் கடந்த 4 மாதங்களுக்கு முன் தண்ணீர் விடப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட  நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இதில் காசிபாளையம், கணபதி பாளையத்தில் மட்டும் சுமார் 1,500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலத்தில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களை நேற்றுமுன்தினம் இரவில் காட்டு பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது.இது குறித்து விவசாயி கோதண்டராமன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாகவே காட்டு பன்றிகளால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காசிபாளையத்தில் நெல் வயலுக்குள் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் பயிர்களை அழித்து வயலுக்குள்ளேயே பல நாட்கள் தங்கி சேதப்படுத்தி வருகிறது. சேதப்படுத்தப்பட்ட வயலில் இருந்து கால்நடை தீவனத்திற்காக வைக்கோலை கூட எடுக்க முடியாது. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உரிய இழப்பீடு வழங்குவதோடு, காட்டு பன்றிகள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்….

The post கோபி அருகே காட்டுப்பன்றிகள் கூட்டம் அட்டகாசம்: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: