கொள்ளிடம் அருகே கடவாசலில் பழைய ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்

கொள்ளிடம்,டிச.18: கொள்ளிடம் அருகே கடவாசலில் உள்ள பழைய ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசலில் ரேஷன் கடை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலான நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை பகுதி பலம் குன்றி சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இந்நிலையில் மழைநீர் உள்ளே கசிந்து வருவதால் உள்ளே இருப்பு வைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கும் நிலை உருவானது. இதனை தவிர்ப்பதற்காக தற்காலிகமாக இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேல் கூறைப்பகுதியில் பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடப்பட்டது. ஆனால் 3 வருடங்களுக்கு மேல் இக்கட்டிடத்தில் மேல் பகுதி பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடப்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு பதிலாக வேறு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டிடத்தின் மேலே உள்ள பிளாஸ்டிக் தாள் அப்படியே தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த ரேஷன் கடையை நம்பி சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருந்து வருகின்றனர். நுகர்வோர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை,மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் இக்கட்டித்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற இந்த ரேஷன் கடை கட்டிடத்தில் தான் நியாய விலை கடை இயங்கி வருகிறது.ஆனால் கட்டிடம் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது. இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடவாசல் பழைய பாதுகாப்பற்ற ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே கடவாசலில் பழைய ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: