ராணிப்பேட்டையில் காடுவெட்டி குருவின் மகள் வந்த வாகனத்தை மறித்த பாமகவினர்!: பிரச்சாரத்தின் போது பரபரப்பு..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் காடுவெட்டி குருவின் மகள் வந்த வாகனத்தை மறித்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியின் சார்ப்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முனிரத்தினம் என்பவர் போட்டியிடுகிறார். அதுமட்டுமின்றி இந்த தொகுதியில் 18 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. வேட்பாளர் முனிரத்தினம் தற்போது தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நெமிலி பேருந்து நிலையத்தில் காடுவெட்டி குருவின் மகளான விருத்தாம்பிகை காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அவர் பிரச்சாரத்தின் போது காடுவெட்டி குருவின் மரணத்தை குறித்து விமர்சித்து பேச தொடங்கியதாக கூறப்படுகிறது. அச்சமயம் அந்த பகுதியில் இருந்த பாமகவினர் சுமார் 150க்கும் மேற்பட்டோர் திடீரென பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேனை மறித்து விருத்தாம்பிகையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டு திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் அதிகளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்னதாகவே ஏராளமான போலீசார் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: