குமரி அருகே முள்ளம் பன்றி வேட்டை3 வக்கீல்கள் உள்பட 5 பேர் கைதுதுப்பாக்கி, கார், பைக் பறிமுதல்

நாகர்கோவில், ஏப்.20: குமரி அருகே முள்ளம்பன்றி வேட்டையாடியதாக 3 வக்கீல்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். முள்ளம்பன்றி, துப்பாக்கி, கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சரகத்துக்குட்பட்ட பகுதியில் முள்ளம்பன்றி வேட்டை நடப்பதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன் தினம் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே உள்ள நெல்லிதோப்பு பகுதியில் சிலர் முள்ளம்பன்றி வேட்டையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் முதலில் 2 பேரை பிடித்தனர். அதன் பின்னர் மேலும் 3 பேரை பிடித்தனர். அவர்கள் 5 பேரையும் நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஜோஸ் (47), ஜான் பெர்லின் (35), நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (58), நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்த பெருமாள்பிள்ளை (58), நாகர்கோவில் சாந்தான்செட்டிவிளை பகுதியை சேர்ந்த இளமுருகு மார்த்தாண்டம் என்பது தெரிய வந்தது. இவர்கள் ஐந்து பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதானவர்களில் சுப்பிரமணியன், பெருமாள் பிள்ளை, இளமுருகு மார்த்தாண்டன் ஆகியோர் வழக்கறிஞர்கள் ஆவர்.

இந்த நிலையில் கைதானவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இது பற்றி அறிந்ததும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வழக்கறிஞர்கள் குவிந்தனர். வனத்துறையினர் முறையாக விசாரிக்காமல் வழக்கறிஞர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி அதன் பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே கைதான வழக்கறிஞர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். கைதானவர்களிடம் இருந்து அனுமதியில்லாத துப்பாக்கி, கார், பைக், கத்தி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வக்கீல்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே நேற்று மதியம், நாகர்கோவில் நீதிமன்ற முன் வழக்கறிஞர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். செயலாளர் வக்கீல் ஆதிலிங்கம், பொருளாளர் வக்கீல் முருகன், உதவி தலைவர் வக்கீல் ரேகா, துணை செயலாளர்கள் வக்கீல்கள் சரவணன், அனிதாராஜன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். பின்னர் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி கூறுகையில், மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணியன், பெருமாள் பிள்ளை, இளமுருகு மார்த்தாண்டம் ஆகிய 3 பேர் மீது, வனத்துறை பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அறிய வழக்கறிஞர்கள் வனத்துறை அலுவலகத்துக்கு சென்ற போது அலுவலகத்தை பூட்டி வைத்து யாரையும் உள்ளே விடாமல் மாவட்ட வன அதிகாரி இளையராஜா நடந்து கொண்டார். ஒருவரை கைது செய்தால், அவரின் வழக்கறிஞர் சந்திக்க சட்டத்தில் இடம் உண்டு. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை கைதானவரின் உறவினர் ஒருவரும், உடன் இருக்கலாம். ஆனால் இது எதையும் வனத்துறை அதிகாரி பின்பற்றவில்லை.இன்னும் 3 நாட்களில் இந்த பொய் வழக்கை ரத்து செய்யா விட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார். வக்கீல்கள் போராட்டத்தையொட்டி டி.எஸ்.பி., நவீன்குமார் தலைமையில் நீதிமன்றம் முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

The post குமரி அருகே முள்ளம் பன்றி வேட்டை

3 வக்கீல்கள் உள்பட 5 பேர் கைது

துப்பாக்கி, கார், பைக் பறிமுதல்
appeared first on Dinakaran.

Related Stories: