குடும்ப பிரச்னையில் தந்தையை வெட்டிய மகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக. 10: குடும்ப பிரச்னை காரணமாக தந்தையை அரிவாளால் வெட்டிய மகனுக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வேளச்சேரியை சேர்ந்தவர் எ.மணிமாறன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (25). தனது தந்தைக்கு துணையாக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிகளை கவனித்து வந்தார். ராஜேஷின் சகோதரிக்கு திருமணம் செய்வது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2014 ஜூலை 12ம் தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தந்தையின் அலுவலகத்திற்குள் நுழைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணிமாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து மணிமாறன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மகன் ராஜேஷ் மீது உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வி.பாண்டியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.கலைச்செல்வன் ஆஜராகி சாட்சியங்களை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் ராஜேசுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post குடும்ப பிரச்னையில் தந்தையை வெட்டிய மகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: