கிழக்கு கடற்கரை சாலையில் விதிமீறல் தொடர்வதால் மூன்று நாளில் 5 விபத்து

தொண்டி, ஆக.4: கிழக்கு கடற்கரை சாலை தொண்டி பகுதியில் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. கடந்த மூன்று நாளில் 5 விபத்துகள் நடந்துள்ளது. பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை தற்போது சாலை மேம்பாடு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான டூவீலர்கள் செல்கின்றது. பெரும்பாலும் டூவீலரில் செல்வோர்கள் முறையாக சாலை விதிகளை கடைபிடிப்பதாக தெரியவில்லை. அதிவேகமாக செல்வது, சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவது என விதி மீறிகள் அதிகம் உள்ளது.

இதேபோல் டிராக்டர்கள் பின்புறம் விளக்குகள் இல்லாததால் எந்த பக்கம் வளைகிறார்கள் என்பது தெரியாமல் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது. தொண்டி, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, வட்டாணம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடக்கிறது. விதிமுறை மீறலே இதற்கு காரணமாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோலியக்குடி அருகே டூவீலரில் சென்றவர் விபத்தாகி சம்பவ இடத்திலேயே பலியானார். முதிழ்தகம் விலக்கு ரோட்டில் மற்றும் பாசிபட்டின் அருகே வாகனம் கவிழ்ந்து இருவர் காயம் என கடந்த மூன்று நாளில் 5க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.

டூவீலர் மற்றும் வாகனம் ஓட்டுவோர் அனைவரும் விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஒட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பரக்கத் அலி கூறியது, டூவீலர் மற்றும் வாகனம் ஓட்டுபவர்கள் முறையாக சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஒருவர் முறை தவறினாலும் விபத்து ஏற்பட்டால் இருவரும் பாதிக்கப்படுகின்றனர். வாகன சோதனையின் போது லைசென்ஸ் இல்லாமல் ஒட்டினால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். சிறுவர்கள் டூவீலர் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்.

The post கிழக்கு கடற்கரை சாலையில் விதிமீறல் தொடர்வதால் மூன்று நாளில் 5 விபத்து appeared first on Dinakaran.

Related Stories: