போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை பஸ் ஊழியர்கள் 27ல் வேலை நிறுத்தம்? அரசுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரச்னையை தீர்க்காமல் நீடித்தால் வேலை நிறுத்தத்தை அரசு எதிர் கொண்டே ஆக வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்த 2ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையிலும் முறையாக தீர்வு ஏற்படவில்லை. பிற்பகல் 1 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியில் வந்த அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொமுச பொருளாளர் நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:  

போக்குவரத்து தொழிற்சங்கங்களில் செயல்படும் 10 சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்ததை தொடர்ந்து நேற்று சிறப்பு இணை ஆணையர் சாந்தி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை 2ம் கட்டமாக  நடந்தது. தற்போது 134 பேருந்துகளை நடத்துனர்கள் இல்லாமல் இயக்கி வருவதால் பணிநிலை பாதிக்கப்படுகிறது. நடத்துனர் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது.  எங்களுக்கான அந்த பலன்களை வழங்க அரசு மறுத்து வருவதையும், வசூல் படியில் உள்ள பிரச்னைகளையும் கூறினோம். பதவி உயர்வு வழங்குவது போன்வற்றை சரி செய்வோம் என்று உத்தரவாதம் அளித்திருக்கின்றனர்.  நிர்வாகம் இங்கு ஒன்றும், செயல்பாடு ஒன்றும் இருந்து வரும் காரணத்தால் தொடர்ந்து வலியுறுத்துவது போக்குவரத்து தொழிலாளர்கள் நியாயமான பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்று சொன்னால் வேலை நிறுத்தத்தை தவிர்த்து வேறு வழியில்லை என்கிற கட்டாய சூழல் ஏற்படுகிறது.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படவில்லை.  இது சம்பந்தமாக அடுத்தகட்ட சமரச நடவடிக்கையின் போது தெரிவிப்பதாக கூறினார்கள். ஆனால் அடுத்தகட்ட  சமரச நடவடிக்கை எப்போது என்று கூறவில்லை. அப்படி தெரிவிக்காததால் இதுபோன்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தொடர்ந்து நீடிக்குமானால் வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

இதில் நிர்வாகம் எந்தவிதமான முடிவுகளும் தெரிவிக்காததால் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் முதற்கட்டமாக அனைத்து மண்டலங்களில் வரும் 19ம் தேதி வேலை நிறுத்தம் பற்றி விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும், அதையடுத்து வரும் 27ம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி அதில் ஸ்டிரைக் சம்பந்தமான அறிவிப்பை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: