கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி: திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம், செப்.23: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திட்டக்குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட திட்டக்குழு செயலாளர் மல்லிகா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 15ம்தேதி தொடங்கி வைத்து, இத்திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு மாதம் ₹1000 வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட திட்டக்குழு நன்றி தெரிவிக்கிறது.

அதேபோல் சிறப்பாக செயல்படுத்திய கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தடுப்பணைகள் கட்டுவது, அண்ணாவிற்கு மணிமண்டபம் ஏற்படுத்துவது, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மழைநீர் வடிகால் வெளியேற்றுவதில் உள்ள பிரச்னைகளை பேசி நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறுகையில், ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் புதிய விண்ணப்பங்கள் தொடர்பாக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு, 1000 ரூபாய் முறையாக கிடைக்காதவர்களுக்கு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இக்கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார் நன்றி கூறினார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி: திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: