கண் சிகிச்சை பிரிவு தொடக்கம்

அரூர், ஜூன் 22: அரூர் அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கண் சிகிச்சை பிரிவு மற்றும் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தினை கலெக்டர் சாந்தி நேற்று குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு மற்றும் அரூர் அரசு மருத்துவமனைகள், தர்மபுரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 9 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அரூர் தாலுகா சுமார் 3 லட்சம் மக்கள் தொகையை கொண்டது. அரூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் கண் நோய் சம்பந்தமான சிகிச்சைக்கு, இதுவரை அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வந்தனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், அரூர் அரசு மருத்துவமனையில் கண் நோய் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் அறுவை சிகிச்சை அரங்கம், ₹15 லட்சம் மதிப்பிலான உபகரணங்களுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, மாவட்ட தேசிய சுகாதார குழும நியமன அலுவலர் பாலாஜி, தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

The post கண் சிகிச்சை பிரிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: