இல்லற வாழ்வை இனிதாக்குவார் இரட்டை விநாயகர்

பாபநாசம், தஞ்சை

விநாயகர் சதுர்த்தி 2 - 9 - 2019

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகர் சில திருத்தலங்களில் ஒரே சந்நதியில் இருவராகவும், மூவராகவும், நான்கு முகங்கள் கொண்டவராகவும், திகழ்கிறார். அந்தவகையில் இரண்டு விநாயகர்கள் ஒரே சந்நதியில் அருள்புரியும் தலம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் கடைத்தெருவின் வடப்பக்கமுள்ள வடக்கு வீதியில் மேலக்கோடியில் உள்ள கோயிலில் இரட்டை விநாயகர்கள் அருட்பாலிக்கிறார்கள். இந்த இரட்டை விநாயகர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு விநாயகர்களும் ஆற்றில் மூழ்கிக்கிடந்ததாகவும், ஆற்றில் மணல் எடுத்தபோது கண்டெடுக்கப்பட்டவராகவும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு விநாயகர்களையும் அந்த ஊர்மக்கள் அருகிலுள்ள அரசமரத்தடியில் நிறுவிவிட்டார்கள்.

நாளடைவில் இந்த இரண்டு விநாயகர்களுக்கும் சேர்த்து சிறிதாக மண்டபம் கட்டினார்கள். இவர்களுக்கு இரட்டை விநாயகர்கள் என்று பெயர் சூட்டினார்கள். மக்களுக்கு கேட்கும் வரத்தினையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு மடங்காக இந்த விநாயகர்கள் வழங்கிடவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முறையாக பக்தர்களால் கோயில் பெரிதாக்கப்பட்டது. சிறிதும் பெரிதுமாகக் காட்சி தந்தாலும் இரட்டை விநாயகர்கள் பக்தர்களுக்கு பெரிதாகவே அருள் புரிகிறார்கள். இதேபோன்ற இரட்டை விநாயகர்கள் துலங்கும் வேறு திருத்தலங்களும் உள்ளன. கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ளது திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில். இதன் வாசலில் ‘குக விநாயகரும், சாட்சி விநாயகரும்’ ஆக இரண்டு விநாயகர்கள் தரிசனம் தருகிறார்கள். இவர்களும் இரட்டை விநாயகர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். முருகப் பெருமான், சுவாமிமலைக்கு தவமிருக்க வந்தபோது விநாயகர் இரட்டை வடிவம் எடுத்து முருகனுக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், அவ்விரு உருவங்களும் இங்கேயே தங்கிவிட்டதாகவும் வரலாறு சொல்கிறது.

Related Stories: