மந்தரையின் மாபெரும் சூழ்ச்சி

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்கள். வாழைப்பழம் என்பது மிகவும் இலகுவானது. அதில் கூர்மையான ஊசி இறங்கும்பொழுது அந்த ஊசி இறங்குவது வாழைப்பழத்துக்கே தெரியாது. முதலில் கைகேயியை வாழைப்பழமாக மாற்றிய மந்தரை இப்பொழுது அதிலே தன்னுடைய சூழ்ச்சி என்னும் ஊசியை மிக நுட்பமாக இறக்குகிறாள். இப்பொழுது கைகேயிக்கு தன்னைக் காப்பாற்றுவதற்காகவே வரம் எடுத்து வந்தவள் மந்தரை என்பது போல அவள் மீது அன்பு பெருக்கெடுக்கிறது. இத்தனை பெரிய ராஜ சிக்கலில் இருந்து தன்னையும் தன்னுடைய மகனையும் காப்பாற்றுவதற்காக வந்த தவச்செல்வி தான்மந்தரை என்று மனமார நினைக்கிறாள்.

சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மிக நியாயமான வார்த்தையாகவும் தனக்கென்று அவள் பாடுபட்டு சொல்லுகின்ற வார்த்தையாகவும் கைகேயிக்குப்படுகின்றது.  அதைக் குறித்து அவள் பரிசீலனை செய்யக்கூட விரும்பவில்லை. ‘‘சொல், சொல் மந்தரை! நானே மறந்து போன இந்த இரண்டு வரங்கள் விஷயத்தை நீ எப்படி ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாய்?’’ என்று அவளைக் கொண்டாடுகிறாள். இப்பொழுது சூழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நகருகிறாள் மந்தரை.‘‘கைகேயி, இப்படி அலங்கரித்துக் கொண்டு இருக்காதே! பட்டுத்துணிகளை எல்லாம் தூக்கி எறி! கிழிந்த கந்தையைக் கட்டிக் கொள்! மெத்தையில் படுக்காதே! கீழே படு! இப்படி மலர் சூடி தலையை அலங்கரித்துக் கொள்ளாதே.

கலைத்துப்போடு. தசரதன் உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கப் பிரியப்பட மாட்டான் அதனால் அவனே வந்து என்ன காரணம் என்று கேட்பான். அப்பொழுது நீ இந்த இரண்டு வரங்களைக் கேள்’’குலசேர ஆழ்வார் கைகேயியைப் பாடுகின்றபொழுது ‘‘தொத்தலர் சுரி குழல் கைகேயி’’ என்று அவளுடைய அழகான கூந்தலையும் அந்தக் கூந்தலை அலங்கரித்துக்கொண்டிருந்த விதத்தையும் மிகவும் வருணிக்கிறார். தசரதனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதினால் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் ஈடுபாடு காட்டுவாளாம் கைகேயி.அதே கைகேயி கவனயீர்ப்பாகத் தன்னுடைய அலங்காரத்தை முற்றிலும் அழித்துக்கொள்ளுகின்றாள்.

தசரதன் வந்தபொழுது தன்னுடைய கூந்தலை விரித்துப்போட்டு வெறும் தரையில் படுத்துக்கிடக்கின்றாள் கைகேயி.. பொதுவாக பெண்கள் கூந்தலை விரித்துப்போடுவதும், விரிப்பு இல்லாத வெறும் தரையில் படுப்பதும் குடும்பத்துக்கு ஆகாது என்று சொல்வார்கள். அது கணவனின் உயிருக்கு ஆபத்து என்றும் சொல்வார்கள். கைகேயி தன்னுடைய கூந்தலை விரித்துப்போட்டு அமங்கலமாக வெறும் தரையில் படுத்தாள். தன் குடும்பத்துக்கும் கணவனுக்கும் பிள்ளைக்கும் ஆபத்தைத் தேடிக் கொண்டாள். மந்தரையைக் கைகேயி இறுகத் தழுவிக் கொண்டாள். அவளுக்கு பலப் பல பரிசுகளையும் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தையை சொல்லுகின்றாள் அதுதான் கொடுமையிலும் கொடுமை.‘‘என் மகன் பரதனுக்கு தாயாகிய என்னை விட நீ நல்லது நினைத்து, இந்தத் தரை முழுவதும் ஆளும்படி ஆக்கினாயே! இனி நான் பரதனுக்கு தாய் அல்ல, நீ தான் என் மகன் பரதனுக்குத் தாய்’’ என்று சொல்கிற அளவுக்கு போய்விடுகிறாள். கம்பனுடைய அருமையான பாட்டு.

‘‘உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உறத்தழுவி
நிரைத்த மாமணி ஆரமும் நிதியமும் நீட்டி
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்
தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தனியா’’

‘‘மந்தரை, நீ என் கூட வந்தது நல்ல தாகப் போய்விட்டது. நான் ஆரம்பத்தில் உன்மீது ஆத்திரப்பட்டேன். நீ சொல்லுகின்ற ஒவ்வொரு பேச்சும் எனக்காகத் தான் என்பதைப் புரிந்துகொண்டேன். நீ எனக்கு நல்லது கூறினாய். நான் தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்பதற்குத் தயாராகி விட்டேன். நீ கிளம்பு’’தன்னுடைய சூழ்ச்சி நிறைவேறி விட்டதை அறிந்து, இனி இந்த உலகமே திரண்டு வந்தாலும் கைகேயியின் மனதை மாற்ற முடியாது என்பதை நிர்ணயித்துக் கொண்டு புறப்படுகிறாள். ஆயினும் அவளுக்கு ஒரு சின்ன சந்தேகம். வாசல் வரை போனவள் திரும்ப வந்து கேட்கிறாள். ‘‘கைகேயி ஒருகால் நீ கேட்ட வரங்களை தசரதன் அளிக்காவிட்டால்……..’’ இப்பொழுது கைகேயி சொல்லும் பதில் அதிர்ச்சியளிப்பது.‘‘நான் கேட்டது கிடைக்காவிட்டால் அந்த தசரதன் முன்னாலேயே என் உயிரை நான் போக்கிக்கொள்வேன் அதைப்பற்றி நீ கவலைப்படாதே, போ’’ ஒரு நெருப்புப் பொறியை பற்றுவது வரைதான் ஊதிக்கொண்டிருக்க வேண்டும். அது கப கப என்று எரியத் தொடங்கி விட்டால், பிறகு ஊத வேண்டிய அவசியம் கிடையாது. அது மட்டும் அல்ல. அதற்குப் பிறகு அந்த நெருப்பை யாராலும் அணைக்க முடியாது. இனி மந்தரையே வந்து நல்ல புத்தியைச் சொன்னாலும் கைகேயிக்கு ஏறாது என்பது முக்கியம். மந்தரை சென்ற பிறகு கைகேயி தான் படுத்துக் கொண்டிருந்த மலர் மஞ்சத்தில் இருந்து இறங்குகின்றாள். தனது கூந்தலில் இருந்த பூ மாலையைக் கசக்கி எறிகின்றாள். ஒளி மிகுந்த தன்னுடைய மேகலாபரணத்தை அறுத்துப் போடுகின்றாள். அந்த மணிகள் அறை முழுவதும் சிதறுகின்றன. காலில் அணிந்திருந்த ஆபரணங்களையும் கையில் அணிந்திருந்த வளையல்களையும் கழற்றி எறிகின்றாள். அதற்குப் பிறகு அவள் செய்த காரியம், எதற்காகவும் எந்த பெண்ணும் செய்யத் துணியாத காரியம். ஆம்; தன்னுடைய நெற்றித் திலகத்தை அழித்துக்கொண்டாள். அதற்குப் பிறகு அவள் திலகம் வைக்கக்கூடிய வாய்ப்பே கிடைக்கவில்லை. கம்பன் மனம் நொந்து விபரீத புத்தியால், ஒரு குலமகள் செய்யக்கூடாத காரியத்தை கைகேயி செய்துவிட்டாளே என்று மனம் பதறி எழுதுகின்றார்,

வளை துறந்தனள் மதியினில்
மறுத்துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும் பெறல்
திலகமும் அழித்தாள்

சீதை திருமகளின் அம்சம். இவளுடைய சதியால் அவள் அயோத்தியை விட்டு நீங்கப்போகிறாள். திருமகள்நீங்கிவிட்டால் அந்த இடத்தில் திருமகளின் அக்காள் வந்து அமர்ந்து கொள்வாள். அதாவது ஸ்ரீ தேவி நீங்கி விட்டால் மூதேவி வந்து அமர்ந்துகொள்வாள். மூதேவிக்கு தவ்வை என்று ஒரு பெயர் உண்டு. மூதேவி படுக்கையில் விழுந்து கிடந்ததைப் போல கைகேயி கிடந்தாளாம் (‘‘தவ்வை ஆம் எனக்கிடந்தனள் கேகயன் தனையை’’) இந்த கோலத்தில் கைகேயி இருக்கும் பொழுதுதான் தசரதன் ராமன் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு மகிழ்ச்சியோடு
நுழைகின்றான்.

தேஜஸ்வி

The post மந்தரையின் மாபெரும் சூழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: