ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது நாட்டின் பிரச்னைகளுக்கு எந்த தீர்வையும் தராத பட்ஜெட்: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து

சென்னை: நாடு சந்தித்து கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு எந்த தீர்வும் இல்லை என்றும், ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது என்று ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: எடப்பாடி பழனிச்சாமி(அதிமுக): நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் 44,000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்த  நிதியமைச்சருக்கு நன்றி. விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்று நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்): வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. வருமான வரி கட்டுபவர்களுக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விதிப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஒருசில தொழிலதிபர்கள் சொத்து குவிப்பதற்கான வாய்ப்புகள் பாஜ ஆட்சியில் அதிகரித்துள்ளது. வைகோ(மதிமுக): கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி.) ஒரே நிலையில் தான் இருக்கின்றது. சேவைத் துறை வளர்ச்சி விகிதம் -8.4 விழுக்காடு அளவு படுபாதாளத்தில் இருந்தது. அதனை மீட்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் ‘ஒரு நாடு, ஒரு பதிவு முறை’ என்பதும் மாநில அதிகாரங்களைப் பறிப்பதற்கான முயற்சி ஆகும். முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட்): 142 பில்லியனர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை காட்டுகிறது. அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலையில்லாமலும் வருமானம் இழந்தும் கதறி அழுது வரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது.ராமதாஸ்(பாமக): 80 லட்சம் ஏழைகளுக்கு வீட்டு வசதி வழங்க ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு, 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் செயல்வடிவம் பெறும் போது கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து நாடும், மக்களும் மீண்டு வர முடியும். வேளாண் தொழிலை லாபகரமானதாக மாற்றுவதற்கான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாத ஊதியப் பிரிவினர் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வரும் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்வு, வருமானவரி விகிதங்களின் மாற்றம் ஆகியவை குறித்த எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது.ஜி.கே.வாசன்(தமாகா):  ஒன்றிய அரசின் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, விவசாய வளர்ச்சியை, தொழில் வளர்ச்சியை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.டிடிவி.தினகரன்(அமமுக): எல்.ஐ.சி. பங்கு விற்பனை, நீர்பாசனத் திட்டங்களில் தனியார் மயம், தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் கவலையளிக்கின்றன. ஒரே நாடு, ஒரே பதிவு திட்டத்தை கைவிட வேண்டும்.கமலஹாசன்(மக்கள் நீதி மய்யம்): மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்த இழந்த ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரிவிலக்கு, உச்சவரம்பில் மாற்றம், சிறு, குறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. சரத்குமார்(சமக): ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொருளாதார முன்னேற்றம் சார்ந்த அறிவிப்புகள் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் மாத ஊதியம் பெறும் பெரும்பாலான குடிமக்கள் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை உயர்த்தாததும், ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு என தேசத்தின் பன்முகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் திட்டமும் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.):  வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றதொரு திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு கோரிக்கை வழக்கம் போல் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.* சாமானியர்களுக்கான பட்ஜெட்- மோடி; துரோகம் செய்த பூஜ்ய பட்ஜெட்- ராகுல்பிரதமர் மோடி: சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டானது அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக இருக்கின்றது. பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பானதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இளைஞர்கள், விவசாயிகளின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது.மக்களுக்கு பயனுள்ள பட்ஜெட் இது.ராகுல் காந்தி (காங். முன்னாள் தலைவர்): இது மோடி அரசின் பூஜ்ய பட்ஜெட்.. இந்த பட்ஜெட்டில், மாத சம்பளதாரர், நடுத்தர மக்கள், ஏழைகள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் என யாருக்கும் ஒன்றுமில்லை.மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட் இடம்பெறவில்லை. வார்த்தை ஜால அறிவிப்புகளை தவிர, சொல்லும்படியாக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. இது வெறும் பூஜ்ய பட்ஜெட்.ப.சிதம்பரம் (காங். மூத்த தலைவர்): வரி சலுகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜிஎஸ்டி, வருமான வரி சலுகைகள் இல்லாமல் ஒன்றிய பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போது தான் நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம் பெற்றுள்ளது. ஏழைகளை மறக்காததற்கு நன்றி. ஏழை எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவத்திற்கான பட்ஜெட்டை மக்கள் புறக்கணிப்பார்கள்….

The post ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது நாட்டின் பிரச்னைகளுக்கு எந்த தீர்வையும் தராத பட்ஜெட்: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: