எல்லையில் சீனா பாலம் கட்டுவது எந்த இடம்? வெளியுறவு அமைச்சகம் புதிய விளக்கம்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியின் மீது சீனா பாலம் கட்டி வருவது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. தனது படைகளை மிக விரைவாக குவிப்பதற்கு ஏதுவாக இந்த பாலத்தை சீனா கட்டி வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று அளித்த பேட்டி வருமாறு: அருணாசலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அமைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்கு பதிலாக கிழக்கு லடாக்கில் நிலவி வரும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் சீனா ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.சீனாவின் இந்த நடவடிக்கையானது, அனுமதிக்க முடியாத பிராந்தியங்களை உறுதிபடுத்துவதற்கான அபத்தமான முயற்சியாகும். பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வரும் செயலை ஒன்றிய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.  கடந்த 60 ஆண்டுகளாக சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது. இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post எல்லையில் சீனா பாலம் கட்டுவது எந்த இடம்? வெளியுறவு அமைச்சகம் புதிய விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: