புதுச்சேரி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : புதுச்சேரி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பாஜவின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும், குறிப்பாக துணை நிலை ஆளுநர் மூன்று பாரதிய ஜனதா கட்சி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏழரை லட்சம் புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறைவேற்றவிடாமல் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்பதும், இப்போது ஒப்புதல் அளிக்கும் போது கூட புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து கோரி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டும், புதுச்சேரி மக்களின் நெடுங்காலக் கோரிக்கையினை ஏற்று, இதுவரை மாநில அந்தஸ்து அளிக்கப்படவில்லை. கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும், துணை நிலை ஆளுநர்களின் அத்துமீறலைத் தடுக்கவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படுவது அவசரத் தேவை என்பதை இப்போதாவது மத்திய பாஜ அரசு உணர வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திமுக, அதிமுக, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்த தனித் தீர்மானங்களையே முதல்வர் நாராயணசாமி அரசு தீர்மானமாக ஏற்றுக் கொண்டு, அந்த தீர்மானத்தை புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியிருப்பது புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் எதிரொலித்திருக்கிறது. நாட்டின் தலைநகரான சிறப்பு அந்தஸ்து பெற்ற டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் கூட புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்பதை புதுச்சேரிக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்ட விதிகள், சட்டமன்ற விதிகள் எல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 ஆனாலும், துணை நிலை ஆளுநர் புதுச்சேரி அரசின் அதிகாரங்கள் அனைத்துமே தன்னுடையது என்று சூப்பர் முதலமைச்சர் போல் உரிமை கோருவது வியப்பாக இருக்கிறது. டெல்லி துணை நிலை ஆளுநரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை அவமதிப்பது, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அழகல்ல. ஆகவே உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்றும், அதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பிரவேசிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கிடவேண்டும்.

லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலித்து விட்டு சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இது பொதுமக்களின் கோரிக்கையும் கூட!. ஆகவே, மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: