ஊராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

புதுக்கோட்டை, ஏப்.13: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளதால் மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை சிகிச்சை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டு அங்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதா என்று அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தவுடன் அங்கு உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பார்வையிட்டு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளிட்டவற்றையும் கேட்டறிந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது, மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்வதற்கும் அனைத்து வார்டுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐசியு படுக்கைகள் 85, அதேபோல் ஆக்சிஜன் படுக்கைகள் 290 தயார் நிலையில் உள்ளது ஆக மொத்தம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமாக 1630 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் வந்தால் அவரை ஒருங்கிணைத்து உடனடியாக அனுமதித்து தீவிரமாக கண்காணிக்க அனைத்து அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர், வீட்டுத் தனிமையில் ஒருவர் உள்ளார், பொது இடங்களில் மக்கள் செல்லும்போது அவர்களை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம், கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் தயார் நிலையில் உள்ளோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் உள்ளவர்களுக்கு ஏற்கனவே கூகுள் மீட்டிங்கில் கூட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் அது போல் கூட்டம் நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் அவர்கள் மூலம் அந்தந்த ஊராட்சியில் உள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஊராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: