ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவுகளில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, ஜூன் 17: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடையாறு ஆறு செல்லக்கூடிய ஊராட்சி பகுதிகளான முடிச்சூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஊராட்சிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய்கள் செல்லும் ஊராட்சிகளான நன்மங்கலம், கோவிலம்பாக்கம், ஒட்டியம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டடை (Chennai Rivers Restorations Trust CRRT)யில் உள்ளடக்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மற்றும் கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா (வளர்ச்சி) ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, அடையாறு ஆறு, (ம) பக்கிங்காம் கால்வாய்கள் அடங்கிய ஊராட்சிகளில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கலக்காத வண்ணம் ஊராட்சி அளவிலான பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவிலான பறக்கும் படையில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, ஊராட்சிகளில் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவுகள் கலக்காத வண்ணம் (Hotspot) இடங்களை கண்டறிந்து தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.திட மற்றும் திரவக் கழிவுகளில் இருந்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் வண்ணம் வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாரந்தோறும் அவ்விடம் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் ஆகியோர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது மற்றும் குப்பை கழிவுநீர் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடம் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு மீறுவோர் மீது அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அடையாறு ஆறு (ம) பக்கிங்காம் கால்வாய்கள் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குப்பை மற்றும் கழிவுநீர் கழிவு கொட்டக்கூடாது என தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற்றும் லாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலர் ஆகியோர்களின் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் லாரி உரிமையாளர்களிடம் கழிவுநீரை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பாதுகாப்பான முறையில் வெளியேற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீறுவோரகள் மீது அபராதம் வசூலிக்கப்படும் என்றும் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவுகளில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: