ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காத நாய், பூனைகளுக்கு 3 லட்சத்தில் தீவனம்: கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீதிகளில் உணவு கிடைக்காமல் அல்லல்படும் நாய், பூனை, குதிரைகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான தீவனம் கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல்படும் கால்நடைகளுக்கு (நாய்கள், பூனைகள், குதிரைகள் போன்றவை) உணவு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.  இவ்விலங்குகளுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம்  செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை மூலம் ஆதரவற்ற நாய்கள், பூனைகள், குதிரைகளுக்கு தேவைப்படும்  தீவன பொருட்களை கொள்முதல் செய்து விலங்குகள் நல அமைப்பின் மூலம் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்டமாக சுமார் ₹3 லட்சம் மதிப்பீட்டில் அரிசி-1250 கிலோ, நாய் உலர் தீவனம்-220 கிலோ, 525 கிலோ குதிரைகளுக்கான  தீவனம், ஆவின் நிறுவனத்தின் மூலம் 625 கிலோ பால் பவுடர் முதலானவை இன்று (நேற்று) கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் அவர்களால் மேற்கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.  இதன்மூலம் சுமார் 15 நாட்களுக்கு 1000க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும். கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பணிகள் தங்கு தடையின்றி நடைபெற கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காத நாய், பூனைகளுக்கு 3 லட்சத்தில் தீவனம்: கால்நடை துறை சார்பில் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: