ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

 

ஈரோடு, ஏப்.3: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் ஒன்றான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

இந்த கோயில்களில் ஆண்டு தோறும் குண்டம், தேர்த்திருவிழா, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களிலும் கடந்த 23ம் தேதி கம்பங்கள் நடப்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மூன்று கோயில்களிலும் நடப்பட்ட கம்பத்திற்கு புனித நீர் மற்றும் பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வின் ஒரு பகுதியான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா நேற்று நடைபெற்றது.  முன்னதாக நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் பூசாரிகள் குண்டம் இறங்கினர். பின்னர், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

தொடர்ந்து, இன்று இரவு மாவிளக்கு, கரகம் எடுத்து வருதலும் நடைபெற உள்ளது. இன்று (3ம் தேதி) பொங்கல் விழாவும், அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடக்கிறது. வருகிற 6ம் தேதி (சனிக்கிழமை) கம்பம் எடுக்கும் விழாவும், மஞ்சள் நீராட்டும், 7ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

The post ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: