இந்தியாவிலேயே முதல் முறையாக பாக்., விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்: தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது

சென்னை: உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாக்., விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்கப்படும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று தமிழக அரசால் 2021 செப்டம்பர் 3ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில், 448 சதுர கி.மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் (பாக்விரிகுடா) காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய உடனடி தேவை தற்போது எழுந்துள்ளது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, தமிழக அரசு, கடலோர சமூகத்தினருடன் குறிப்பாக உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மக்களுக்கு விதிக்கப்படப்போவதில்லை.  பாக்வளைகுடாவில், தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் பெருமைக்குரியதாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமை கொள்வர்.  நமது நாட்டில் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்தியாவிலேயே முதல் முறையாக பாக்., விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்: தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது appeared first on Dinakaran.

Related Stories: