ஆந்திர தொழிற்சாலை பாதாள கிடங்கில் 4 டன் சந்தன கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது, உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலை

திருமலை: தமிழ்நாடு, கேரள வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தப்பட்ட 4டன் சந்தன கட்டைகள் ஆந்திராவில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், அமராபுரம் அருகே பாசவன்னபள்ளியில் யுனைடட் ஆயில் இண்டஸ்ட்ரி என்ற பெயரில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்ட விலை மதிப்பு வாய்ந்த சந்தனக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமராபுரம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பூமிக்கு அடியில் பள்ளம்தோண்டி அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் 188 சாக்கு பைகளில் சுமார் 4 டன் எடையுள்ள சந்தனக்கட்டைகள், 16 கிலோ சந்தன எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சந்தனக்கட்டைகள், சந்தன எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த கிருஷ்ணன், தொழிற்சாலையின் உரிமையாளர் அப்துல்ரகுமான், பங்குதாரர் கேரளாவை சேர்ந்த முகமதுகுட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்துல்ரகுமான், முகமது குட்டியை தேடி வருகின்றனர்….

The post ஆந்திர தொழிற்சாலை பாதாள கிடங்கில் 4 டன் சந்தன கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது, உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: