அரசு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் கட்டணம் வசூல்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு

வேலூர், ஆக.10: அரசு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் கட்டணம் வசூல் செய்வதாக கூறி மாணவர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: உயர் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் பல்கலைக்கழகங்களிலும், தனியார் கல்லூரிகளிலும் உயர்கல்வில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம் என அரசு அறிவித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி சேர்க்கைகக்கு வரும் மற்றும் பயின்று வரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மறுக்கும் மாணவர்களை தேர்வுக்கு அனுமதிக்காமல் இருப்பதால் உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்னும் இதே நிலை நீடித்ததால் அப்போது போராட்டம் நடத்தி ஹால் டிக்கெட்டை பெற்றோம். ஆனால் இப்போதும் அதே நிலை தொடர்வதால் மாணவர்கள் தேர்வு சமயங்களில் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

The post அரசு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் கட்டணம் வசூல்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: