பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி வரை தண்ணீரின் அளவை உயர்த்தலாம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், செப்.28: பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி வரை தண்ணீரின் அளவை உயர்த்தலாம் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தில் பனை விதை நடும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பேபி அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்பொழுது உள்ள நிலை 142 அடி வரை தண்ணீர் உயர்த்தலாம். ஆனால் பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி வரை தண்ணீரின் அளவை உயர்த்தலாம். ஆனால் பேபி அணையை பலப்படுத்தினால் எந்த பாதிப்பும் இல்லை. அந்த அணையின் அருகில் 15 மரங்கள் இருந்த நிலையில் தற்போது ஏழு மரங்கள் தான் உள்ளது. அரை மணி நேரத்தில் அந்த மரங்களை வெட்டி எடுத்து விடலாம்.

நம் எல்லையை ஒட்டி தான் மரங்கள் உள்ளது. ஆனால் அது பல பிரச்சினைகளை உருவாக்கும். அப்பிரச்சனையை சட்டப்படி சந்திக்க உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கூறியும் அதை இன்னும் வெட்டப்படவில்லை. சிறுவாணி அணையை கட்ட கேரள அரசுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கவில்லை. ஏரிகளில் விவசாயிகள் மண் எடுத்துக் கொள்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் விவசாயிகள் என்ற போர்வையில் ஒரு லாரிக்கு பதில் 20 லாரியில் மண் எடுக்கிறார்கள். மனசாட்சி இல்லாமல் மண் எடுக்கிறார்கள். குறிப்பிட்ட அளவு தான் மண் எடுக்க வேண்டும். ஆனால் பெரும் பகுதியில் மணலைத் தான் தோண்டி எடுக்கிறார்கள். நீர்நிலைகளில் மண் எடுக்கும்போது ஒரே சமமாக இருக்க வேண்டும். ஆனால் மண் எடுப்பவர்கள் கிணறு போல நோண்டி விடுகிறார்கள். அதனால் தான் ஏரியில் மண் எடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மண் எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பேபி அணையை பலப்படுத்தினால் 152 அடி வரை தண்ணீரின் அளவை உயர்த்தலாம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: