அண்ணா நகரில் பங்களா வீட்டில் அதிகாலை புகுந்து மூதாட்டி, வேலைக்கார பெண்ணை மிரட்டி ₹1.5 லட்சம் பணம், 15 சவரன் கொள்ளை:  கத்திமுனையில் கொலை மிரட்டல்  காவல் நிலையம் பின்புறம் துணிகரம்

 

அண்ணா நகர், செப். 14: சென்னை அண்ணா நகரில் பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மற்றும் வேலைக்கார பெண்ணை கத்திமுனையில் மிரட்டி ஒன்றரை லட்சம் ரொக்கம், 15 சவரன் நகை உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்துச் சென்றனர். காவல் நிலையம் பின்புறம் அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் பின்புற பகுதியில் உள்ள பி பிளாக் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுசித்ரா (70). அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு வேலை செய்து கொண்டு, மூதாட்டியை பராமரித்து அங்கேயே தங்கி உள்ளார். மூதாட்டியின் மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

இந்நிலையில், மூதாட்டி தனியாக வசிப்பதை நீண்டநாட்களாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று மூதாட்டியின் பங்களா வீட்டிற்குள் புகுந்தனர். இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் மகாலட்சுமி ஆகியோர், நீங்கள் யார் என்று கேட்டு கூச்சலிட்டுள்ளனர். உடனே, மர்ம நபர்கள் இருவரின் வாயையும் சத்தம் போட முடியாதபடி பொத்தி கத்தியை கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

பின்னர் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் பணம் மற்றும் நகைகள் எங்கு உள்ளது. பீரோ சாவியை கொடு என கேட்டு மிரட்டியுள்ளனர். சாவி என்னிடம் இல்லை என்று சொன்னதும் கடும் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், பீரோவின் லாக்கரை உடைத்து ஒன்றரை லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 15 சவரன் நகை, ரூ.50,000 மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை கொள்ளை அடித்துள்ளனர். பிறகு, போலீசிடம் சொல்ல கூடாது. அப்படி சொன்னால் கொலை செய்து விடுவோம் என மீண்டும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

பணம் மற்றும் நகையை பறிகொடுத்த மூதாட்டி அமெரிக்காவில் உள்ள தனது மகனிடம் செல்போனில் தெரிவித்து கதறி அழுதார். அவரது அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து என்ன என்று கேட்டறிந்தனர். அப்போதுதான், மர்மநபர்கள் கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளை அடித்துச்சென்றுவிட்டதாக கூறி கதறினார். பின்னர் அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணாநகர் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை செய்தனர். இதுகுறித்து மூதாட்டி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொள்ளை தொடர்பாக மூதாட்டி மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் திட்டம் போட்டு நடந்ததா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் ரோந்து வராததே காரணம்
நகை, பணம் கொள்ளை குறித்து மூதாட்டி கூறியதாவது: வீட்டிற்குள் மிகப்பெரிய கத்தியுடன் திடீரென்று புகுந்த இரண்டு மர்ம நபர்களால் பயந்து போனேன். அவர்கள் எனது கழுத்து மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து சென்றனர். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறி கதறினார். பொதுமக்கள் கூறும்போது, ‘அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர்களில் விஐபிக்கள்தான் அதிகம். அதேபோல் அண்ணாநகர் சுற்று வட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணி வருவது இல்லை. இதனால் இந்த பகுதியில் செல்போன் பறிப்பு, பைக் திருட்டு, தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்து உள்ளது. இச்சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இனிமேலாவது இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என்றனர்.

The post அண்ணா நகரில் பங்களா வீட்டில் அதிகாலை புகுந்து மூதாட்டி, வேலைக்கார பெண்ணை மிரட்டி ₹1.5 லட்சம் பணம், 15 சவரன் கொள்ளை:  கத்திமுனையில் கொலை மிரட்டல்  காவல் நிலையம் பின்புறம் துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: