சென்னை: சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், சாதி, மதமற்றவர் என்று சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமுக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும். சாதி, மதமற்றவர் என்று சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை. தற்போது சாதி மதமற்றவர் என்று சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் எதுவும் இல்லாததால், புதிதாக சட்டம் இயற்றும்போது, சாதி, மதமற்றவர் என்று சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவிற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக உள்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
