ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் கருவி மூலம் விமானப்படை தேர்வில் மோசடி; 2 அரியானா வாலிபர்கள் கைது: உதவி செய்த நண்பர்கள் இருவர் சிக்கினர்

 

சென்னை: ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் கருவி மூலம் விமானப்படை தேர்வை மோசடியாக எழுத முயன்ற 2 அரியானா வாலிபர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களுக்கு உதவி செய்த நண்பர்களும் போலீசாரிடம் சிக்கினர்.  விமானப் படையில் காலியாக உள்ள 4 எழுத்தர் பணிக்கான எழுத்து மற்றும் திறன் தேர்வு நேற்று ஆவடியில் உள்ள விமானப்படை மையத்தில் நடந்தது. இந்த தேர்வில் மொத்தம் 1050 பேர் பங்கேற்றனர். காலை 10 மணியளவில் முதற்கட்டமாக எழுத்து தேர்வு நடந்தது. விமானப்படை அதிகாரிகள் தேர்வு மையத்திற்கு வந்தவர்களை சோதனை செய்து தேர்வு அறைக்கு அனுப்பினர். தேர்வு அறையில் விமானப் படை அதிகாரிகள் தேர்வு அறை அனுமதிச்சீட்டை சரிபார்த்து தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.

அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது விமானப்படை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களை சோதனை செய்தபோது இருவரும் தங்களது காதுகளில் மிகச்சிறிய அளவிலான எலக்ட்ரானிக் கருவியை பொருத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரையும் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றி தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், இருவரும் ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் என்ற தகவல் பரிமாற்றம் கருவியுடன் தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானப்படை அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அரியானா மாநிலம் துஹா மாவட்டத்தை சேர்ந்த கவுரவ் (21) மற்றும் ஜின்ட் மாவட்டத்தை சேர்ந்த அனில் (27) என தெரியவந்தது. மேலும், இவர்களின் நண்பர்களான சவாண் (25), தீபக் (24) ஆகியோர் முத்தாபுதுப்பேட்டையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து, அங்கிருந்தபடி ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் கருவியின் மூலம் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொண்டு முறைகேடாக தேர்வு எழுத முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஆவடி விமானப்படை அதிகாரிகள் இருவரையும் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து முறைகேடாக தேர்வு எழுத முயன்ற கவுரவ், அனில் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில், மோசடியாக தேர்வு எழுத உதவிய அரியானா மாநிலம் ஜின்ட் மாவட்டத்தை சேர்ந்த சவாண் (25), தீபக் (24) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், விமானப்படை தேர்வில் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: