காவிரி நீரை திறக்கக்கோரி திமுக அவசர மனு செய்ததை தொடர்ந்து கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு அறிவிப்பு

 

சென்னை: காவிரி நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்த நிலையில்,முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் வக்கீல் பி.வில்சன் அவசர மனுவை கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 27ம் தேதி நடந்த 139வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.7.2026 (காலை 8 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.7.2026 முதல் 12.8.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. 30.7.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது (அவசர) கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்கு பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.7.2026 முதல் 2.8.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே. நேற்று (3ம் தேதி) நிலவரப்படி, கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் 23.078 டிஎம்சி, கபினியில் 18.610 டிஎம்சி, ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டிஎம்சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டிஎம்சி) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது.

இதற்கிடையே, கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டிஎம்சி ஆகும். இதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டிஎம்சி மிக குறைவாகும். இந்த சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டிஎம்சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி முதல்வர் விஜய் நேற்று உச்ச நீதிமன்றத்தை அணுகி தக்க உத்தரவை பெற அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி இப்பிரச்னைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மேகதாது விவகாரத்தில் புதிய ரிட் மனு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘மேகதாது பகுதியில் அணை கட்டக்கூடாது. இந்த விவகாரத்தில் எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது. திட்ட வரைவு அறிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது. குறிப்பாக அதனை பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆரம்பக்கட்டத்திலேயே அதனை நிராகரிக்க வேண்டும். மேகதாது அணை என்பது தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். மேலும் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை என்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிரானதாகும். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: