சென்னை: பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978ன் விதி 35(4)ன் கீழ், கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7ம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக பதவி உயர்வு, நியமனம், பணி இடமாற்றம், நிலம் கையகப்படுத்தல், நில மாற்றம் உள்ளிட்டவைக்கு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்ட புதிய உத்தரவில் கூறியிருப்பதாவது: துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோரின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வு பட்டியல்கள் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். மற்ற மாநிலப் பணியாளர் பதவி உயர்வு பட்டியல்களில் சம்பந்தப்பட்ட துறை, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் நிதித்துறைக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மனிதவள மேலாண்மை அமைச்சரின் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பப்பட வேண்டும். மூப்பு அடிப்படையை மீறிய பதவி உயர்வுகள் தொடர்பான கோப்புகள் தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையுடன் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணியாளர் அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனம், பணி இடமாற்றம் தொடர்பான அனைத்து கோப்புகளும் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். சட்ட அலுவலர்கள் நியமனத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், அரசு பிளீடர் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களுக்கு முதலமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான இதர சட்ட அலுவலர்களின் நியமனங்களை எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார்.
நீர்வளத் துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் பணியிட மாற்றம் தொடர்பான கோப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பரிசீலிப்பார். பொதுப்பணித் துறையில் இதே நிலை அதிகாரிகளின் கோப்புகளை பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் முடிவு செய்வார்.ஒரு ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலம் கையகப்படுத்தப்படும் ரயில்வே, சாலை, தேசிய நெடுஞ்சாலை, பாசன கால்வாய், மின்வழித்தடம், தொழில் வழித்தடம், மலிவு விலை வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு மிகாத நிலம் கையகப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய் அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும்.
ஒரு அரசுத் துறையிலிருந்து மற்றொரு அரசுத் துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அந்த கோப்பு முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், துறைத் தலைவர் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளை தவிர பிற அதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றம், பணியமர்த்தல் உள்ளிட்ட கோப்புகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் முடிவு செய்வார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்கும் அதிகாரமும் அந்த அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் பழைய வாகனங்களை முன்கூட்டியே பயன்பாட்டிலிருந்து நீக்குவது தொடர்பான கோப்புகளுக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் வழங்குவார்.மேலும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில தகவல் ஆணையம், தமிழ்நாடு லோக் ஆயுக்தா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒம்புட்ஸ்மேன் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களை இனி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
