சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தின் தண்ணீர் உரிமையை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 12.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சாகுபடியானது நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நடைபெற்றுள்ளது. காவிரி நதிநீர் உடன்பாடு, மேகதாது அணைத்திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
