சென்னை: உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்ற திமுக ஆட்சி செய்த சாதனைக்கு தவெக அரசு விருது பெற்றது. உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு “சிறந்த மாநிலம்” என்ற விருதை வழங்கியுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் 2025ம் ஆண்டு ‘‘சிறந்த மாநிலத்திற்கான” விருதினை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் அருண்ராஜிடம் வழங்கினார்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்த முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுப் பணிகளை முறைப்படுத்த தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் தமிழ்நாடு இதய மாற்று சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையில் முதலிடம் வகிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. தேசிய அளவில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு இதுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒன்றிய அரசின் தேசிய விருதுதை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 2008 முதல் ஜூலை 2026 வரை 2,490 உறுப்பு கொடையாளர்களிடமிருந்து 14,532 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதில் 1,027 இதயம், 1,071 நுரையீரல், 2,204 கல்லீரல், 4,394 சிறுநீரகம், 49 கணையம், 39 சிறுகுடல், 4 வயிறு மற்றும் 9 கைகள் என 8,797 முக்கிய உறுப்புகளும், 1,107 இதய வால்வு, 3,677 கார்னீயாஸ், 395 தோல், 2 ரத்த நாளங்கள், 525 எலும்புகள், 26 முதுகெலும்பு மற்றும் டிஸ்க் திசுக்கள், 3 வயிற்று மடல் என 5,735 இதர உறுப்புகள் மற்றும் திசுக்கள் என மொத்தம் 14,532 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
மூளைச் சாவு அடைந்த பிறகு உறுப்புகளை தானம் அளித்தவர்களுக்கு அவர்களது இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்படுமென முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பிறகு உடல் உறுப்பு தானம் அதிகரித்ததும், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
