சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பம்பா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும், பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியிருந்தது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இன்று நடைபெறவுள்ள சிறப்பு ‘நிறபுத்தரி’ பூஜையைக் காண பக்தர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், பம்பை, சந்நிதானம் செல்லும் மலைப்பாதைகள் மற்றும் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
