வேன் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது விபத்து: எட்டயபுரத்தில் பள்ளத்தில் பஸ் பாய்ந்து 10 பேர் காயம்

 

எட்டயபுரம், ஜூலை 31: திருச்செந்தூரில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு குமுளிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியை சேர்ந்த தெய்வநாயகம்(53) ஓட்டினார். முக்காணியை சேர்ந்த மாரிமுத்து(58) கண்டக்டராக பணியில் இருந்தார். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதியம் 1 மணியளவில் எட்டயபுரம் பைபாஸ் சாலையில் வந்தபோது, விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி சென்ற வேன், பஸ் வருவதை கவனிக்காமல் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பஸ் டிரைவர், வேன் மீது மோதாமல் இருக்க இடபுறமாக திருப்பி உள்ளார். இதில் வேன் மீது சிறிது உரசியபடி எட்டயபுரம் – விளாத்திகுளம் சாலை குறுக்கீடு பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் விழுந்தது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் தெய்வநாயகம், கண்டக்டர் மாரிமுத்து, சிவகங்கை மாவட்டம் பாப்பன்வலசை சேர்ந்த லட்சுமணன்(49), சேது(49), ஆனந்தன்(51), கோவை ராஜநாயுடு லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(49), அவரது மனைவி கல்பனா(47), பாண்டியாபுரத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி(46) மற்றும் வேனில் இருந்த 2 பேர் என 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற எட்டயபுரம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் எட்டயபுரம் நடுவிற்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: