வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது: வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

 

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கும் மசோத மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தாக்கல் செய்தார்.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு சகிப்புத்தன்மையைற்ற அணுகுமுறை கொண்டிருப்பதை இந்த மசோதா உறுதிப்படுத்துவதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். பின்னர் விவாதத்தில் பங்கேற்று பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘முக்கியமான இந்த மசோதா மீதான விவாதத்தின் போது அவையில் பிரமதர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இல்லாதது கண்டிக்கத்தக்கது. இவ்வளவு கொந்தளிப்பான சூழல் நிலவியும் அவர்கள் இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

யாராவது உங்கள் வாயை தைத்து விட்டார்களா? போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையின் அத்துமீறலுக்கு அமித்ஷா தான் பொறுப்பு. நாட்டின் நலன் கருதி, அந்த அவமானத்தை அவர் தாங்கியிருக்க வேண்டும்.மாணவர்கள் அரசுக்கு ஏற்கனவே ஒரு பாடத்தை கற்பித்துள்ளார்கள். அடுத்து, அதைவிடப் பெரிய பாடத்தை மீண்டும் கற்பிப்பார்கள்’’ என ஒன்றிய அரசை எச்சரித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். விவாதத்தில் பேசிய அவர், ‘‘மாணவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். பெல்லட் துப்பாக்கிகள், தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி அவர்களை கையாள முயற்சிக்காதீர்கள்’’ என்றார். வினாத்தாள் கசிவு பிரச்னை அதிகரிப்பதற்கு பயிற்சி மையங்களே காரணம் என குற்றம்சாட்டி அதிமுக எம்பி தம்பிதுரை, அவற்றை ஒழுங்குபடுத்த அல்லது ஒழிக்க தனி சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினார். தொடந்து விவாதம் நடந்தது. அமித்ஷா அவைக்கு வராததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு நடந்த வாக்கெடுப்பில் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

* எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முன்னதாக நேற்று காலை மாநிலங்களவை கூடியதும், மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் ஒடுக்குமுறை குறித்து அமித்ஷா பதிலளிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: