புதுடெல்லி: பிரதமர் மோடியின் வீடியோவை பேஸ்புக் நிறுவனம் சிறிது நேரம் முடக்கியதைத் தொடர்ந்து, மெட்டாவின் மூத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து ஒன்றிய அரசு சம்மன் வழங்கியதுடன், இந்தச் சம்பவம் குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்த மெட்டா உரிய விளக்கமும் அளித்தது. தற்போது மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
இது குறித்து மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறும்போது,’ நேரில் வந்து உயர்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு மெட்டாவைக் கேட்டுக்கொண்டுள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, முக்கியப் பிரமுகர்களின் கணக்குகளுக்குப் புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது’என்றார்.
