மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் வந்தே மாதரம் பாடலை இனி அவமதித்தால் 3 ஆண்டு சிறை: திமுக கடும் எதிர்ப்பு

 

புதுடெல்லி: தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. கடும் அமளிக்கு இடையே நடந்த குறுகிய விவாதத்தில் மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 1971ல் கொண்டு வரப்பட்ட தேசிய கவுரவ அவமதிப்பு சட்டத்தின்படி, தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் தேசிய பாடலான வந்தே மாதரத்தையும் சேர்க்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு குறுகிய விவாதம் நடந்தது.

விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ‘‘தேசியவாதம் என்ற போர்வையில் கொண்டு வரப்படும் இந்துத்துவா அஜெண்டா இது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. சட்டத்தின் மூலம் தேசியவாதத்தை நீங்கள் திணிக்க முடியாது. இப்பாடல் நாட்டின் மதச்சார்பின்மைக்கு முரணாக உள்ளது. நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்கள் இப்பாடலின் 2 சரணங்களை போதும் என்ற கருத்தை கொண்டிருந்தனர். ஆனால் இன்று, அனைத்து 6 சரணங்களையும் பாடுவதை கட்டாயமாக்கி, அவ்வாறு பாடாததை ஒரு குற்றமாகக் கருதுவதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த நீங்கள் முயற்சிக்கிறீர்கள்’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு எம்பிக்கள் மட்டுமே விவாதத்தில் பேசிய நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘‘காங்கிரஸ் தனது 76 ஆண்டுகால ஆட்சியில் வந்தே மாதரம் பாடலுக்கு உரிய மரியாதையை அளித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டது. மோடி அரசு தேசிய பாடலுக்கு அது பெற தகுதியான உரிய மரியாதையை அளித்து வருகிறது. ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற நோக்கத்திற்கு வந்தே மாதரம் பாடலின் முழுமையான வடிவம் நமக்கு தேவை’’ என்றார். பின்னர், எதிர்க்கட்சிகளின் அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அப்போது திமுக எம்பி ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்து ஆவணத்தை கிழித்து அவையின் மையப்பகுதியில் வீசினார். இதன் மூலம், தேசிய கவுர அவமதிப்பு தடுப்பு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும். இனி தேசிய கீதத்தை போல தேசிய பாடலான வந்தே மாதரம் பாடுவதை திட்டமிட்டு தடுத்தாலோ, இடையூறு செய்தாலோ 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய அலுவல்கள் முடித்துக் கொள்ளப்பட்டு மக்களவை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: