கறிக்கோழி விற்பனை நிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்

 

தஞ்சாவூர்: தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் துரைராஜ் தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பிராய்லர் கோழி வளர்ப்போர், கோழியை விற்பனைக்கு அனுப்பும் போது, தீவனங்களை வழங்குவதால், கோழியின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது. 8 முதல் 12 மணி நேரம் முன்னதாக கோழியை விற்பனைக்கு அனுப்பும் முன்பு தீவன கட்டுப்பாடு அவசியம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 31ம்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோழி இறைச்சி விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தீவன கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாகவும், இறைச்சிக்காக கோழிகளை அனுப்பும் போது, தீவனங்களை கொடுக்காமல் அனுப்புவதாக கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். இவர்களின் அறிவிப்பை ஏற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 31ம்தேதி) முதல் நடக்கவிருந்த கோழி இறைச்சி விற்பனை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எங்கள் போராட்டத்தால் யாரும் பாதிக்ககூடாது என்பதற்காக போராட்ட அறிவிப்பை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: