சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஓசூர் சிங்காரவேலு முதலியார் தெருவில் 14 நில உரிமையாளர்களுக்கு சொந்தமான நிலங்களில் எனது குடும்பம் உள்ளிட்ட 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராமமூர்த்தி, தங்கள் தெருவிலேயே வசிக்கும் காங்கிரஸ் எம்.பி.,யுமான கே.கோபிநாத் பொதுப்பாதையை ஆக்கிரமித்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளார் என்றார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘காங்கிரஸ் எம்பி கோபிநாத் ஆக்கிரமித்துள்ளதுஅரசு புறம்போக்கு நிலம் என ஆவணங்கள் மூலம் உறுதியாவதால், அந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
