விருதுநகர் தொகுதி தொடர்பான வழக்கில் மாணிக்கம் தாகூர் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

 

சென்னை: மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அது தள்ளுபடியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

இது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணிக்கம் தாகூர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதை தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஏதேனும் நிவாரணம் வேண்டும் பட்சத்தில் இருதரப்பும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: