மதுரை: கோயில் சொத்துக்கள் முறைகேடாக விற்பனையில் பிரபலங்களின் பினாமி இருப்பதாகவும், இந்த முறைகேட்டில் விவிஐபி மகனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும், பினாமியாக செயல்படும் நபர் சென்னையில் உள்ள ஒரு கோயிலின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தையும் அபகரித்தது தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயிலுக்கு தர்மகாரியங்கள், அன்னதானம் மற்றும் தெய்வீக சேவைகள் செய்வதற்காக கட்டளைக்காக எழுதி வைக்கப்பட்ட, ரூ.60 கோடி மதிப்பிலான அகோதவிலாஸ் பங்களா மற்றும் தோட்டம் உள்ளிட்ட 1.80 ஏக்கர் நிலம் மதுரை அழகர்கோவில் சாலையில் அஜ்மல்கான் ரோடு, சொக்கிகுளம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களை வாடகையை தவிர வேறு எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என உயிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மீனாட்சி அம்மன் கோயிலுக்கான கட்டளை நிலம், கடந்த 2016ல் ராமாயி ஆயியார் உள்பட 9 பேரின் பெயருக்கு மதுரை வடக்கு தாலுகா அலுவலகம் மூலம் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான மேல்முறையீடு மனுவும் ஆர்டிஓ விசாரணையில் உள்ளது.
இந்த பிரச்னைகளை மறைத்து, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திருவள்ளூர் ராமபுரத்தை சேர்ந்த அனிஷ் ஆகியோரது பெயரில் 2021ல் பவர் பதிவு செய்துள்ளனர். இந்த பவர் மூலம் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் கவிதா, பிரகாஷ், காளிக்குமார் ஆகியோர் பெயரில் அடமான பத்திரம் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசார், உசிலம்பட்டி இளையராஜா உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* பத்திரத்தை அடமானமாக பதிவு
இந்த நிலத்திற்கான பவர் பத்திரத்தை கொண்டு, தனது குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் ஆகியோர் சேர்ந்து, வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமான பதிவு செய்துள்ளனர். இதில் இளையராஜா குடும்பச் செலவுக்காக அவருடைய மனைவி கவிதாவிடமே ரூ.15 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளனர். அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக பதிவு செய்துள்ளார். கோயில் கட்டளை நிலத்திற்கு அடுத்தடுத்து பல பத்திரப்பதிவுகளை உருவாக்குவதற்காக இதுபோன்று செயல்பட்டுள்ளனர். இந்த பதிவுகள் அனைத்தும் மோசடியானது என தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு அறிக்கை கொடுத்துள்ளனர். இதையடுத்து, பத்திரப்பதிவு ஐஜி, கடந்த 2022ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் இந்த பத்திரப்பதிவு மோசடி பதிவு என்பதை தெளிவாக கூறியுள்ளார்.
*‘எல்லை’ மீறி பதிவு
மேலும், ஒரு நிலத்தை பதிவு செய்யும் முன், அது அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்பு வாரிய நிலமா அல்லது கோயில் நிலமா என்பதை சரிபார்க்காமலும், பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். விதி பிரிவு 28ன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை, வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி. ஆனால் இதில், அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இரு தனிப்படையினர் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், உசிலம்பட்டி இளையராஜா, இதைப்போலவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சென்னையிலுள்ள நிலத்தையும் முறைகேடாக விற்பனை செய்துள்ள பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.30 ஏக்கர் நிலமும் ேமாசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த 1.30 ஏக்கர் நிலத்தை தற்போது வரை பலரும் உரிமை கோரும் நிலையில், 2006ம் ஆண்டு சரஸ்வதி என்பவர் பெயரில் பட்டா உள்ளது எனக் கூறி, விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோருக்கு விற்றுள்ளனர். பின்னர் இவர்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு 2008ல், வேறு சிலரின் பெயரில் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை டூ நெல்லை…
இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.30 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இளையராஜா மற்றும் வேறொருவர் பெயரில் ஒப்பந்தம் பதிவு செய்துள்ளனர். வேறொருவர் பெயரில் உள்ள நிலத்தை ஒப்பந்தம் போடும்போது பட்டாவில் அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் இல்லாத நிலையில், பிரிவு 28ஐ மீறி சென்னையிலுள்ள நிலத்தை நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் இளையராஜாவுடன் சேர்த்து விவிஐபியின் மகன், ரூ.46 கோடிக்கு இந்த நிலத்தை வாங்க சம்மதித்து முன் பணமாக ரூ.2.50 கோடி கொடுத்துள்ளதாகவும், அதில் ரூ.50 லட்சத்தை ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் ஒப்பந்தத்தில் கூறியுள்ளனர்.
இந்த பதிவிற்கும், சம்பந்தப்பட்ட நிலத்தின் பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும் கூறி 1.30 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜூலை 2022ல் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த சொத்தை இளையராஜாவின் பெயருக்கு பவர் கொடுத்தவர்கள் தரப்பில் உள்ள பட்டாதாரருக்கு இரு வேறு இடங்களில் இறப்பு சான்றிதழ் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் இந்த பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலமோசடி குறித்து விசாரித்து வரும் தனிப்படை போலீசாரின் விசாரணையில் இளையராஜாவின் பங்கு மிக முக்கியமானதாக தெரியவந்துள்ளது. இரு இடங்களில் நடந்த கோயில் நிலமாசடியிலும் மூளையாக இளையராஜா இருந்துள்ளதாகவும், இரு இடங்களும் இளையராஜாவின் பெயரில் பவர் ெகாடுத்து, பின்னர் மற்றவர்களின் ெபயருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாலும், கோயில் நிலமோசடி மற்றும் விற்பனையில் இளையராஜாவின் பங்கு முக்கியமானது என்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், இவர், அரசியல்வாதிகளுக்கு பினாமியாக இருந்து, கோயில் நிலங்களை விற்றிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளதால், இளையராஜாவே முக்கியமானவர் என்றும், இவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளா, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபடுவோரா என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தனிப்படை போலீசாரின் விசாரணை முடிவில், இளையராஜாவின் பங்கும், அவருடன் மற்றவர்களுக்கு உள்ள தொடர்பும் விரைவில் தெரிய வருமென போலீசார் தெரிவித்தனர்.
