சவுகார்பேட்டை கடைகளில் சோதனை நடத்திய ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறைபிடித்த வியாபாரிகள்

 

சென்னை: சென்னை சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திர கடைகள் உள்ளன. இங்கு மொத்த விற்பனையாகவும் சில்லரையாகவும் பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சக கடை உரிமையாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜிஎஸ்டி சோதனை நடத்த வந்த அதிகாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அதிகாரிகள் என்ன செய்வதென தெரியாமல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே யானைகவுனி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேசினர். ஆனால் வியாபாரிகள் அதிகாரிகளை விடாமல் சிறை பிடித்து வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பூக்கடை காவல் துணை ஆணையர், உதவி ஆணையர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேசி ஜிஎஸ்டி அதிகாரிகளை மீட்டனர். மேலும் வியாபாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென சோதனை நடத்த வந்தது தவறு என்றுகூறி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஒரு சிலரை பிடித்து யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சவுகார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: