போபால்: வரதட்சணை கொடுமையால் மாடலிங் நடிகை பலியான வழக்கில் ஓய்வுபெற்ற பெண் நீதிபதியின் ஜாமீன் மனுவை போபால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாடலிங் நடிகையான ட்விஷா சர்மா (33), கடந்த மே 12ம் தேதி தனது கணவர் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பதிவான வரதட்சணை கொடுமை மரணம் மற்றும் சித்ரவதை வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் கடந்த ஜூன் 2ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
35 ஆண்டுகள் நீதித்துறை சேவை ஆற்றிய கிரிபாலா சிங்கின் காவலை, கடந்த ஜூன் 30ம் தேதி மற்றும் ஜூலை 14ம் தேதி என இருமுறை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சிறையில் உள்ள கிரிபாலா சிங் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை போபால் முதல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராம் பிரதாப் மிஸ்ரா நேற்று முன்தினம் விசாரணை செய்து தள்ளுபடி செய்தார். கிரிபாலா சிங் தரப்பில் அவர் 35 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியவர் என்றும், போதிய வருமானம் உள்ளதால் வரதட்சணை கேட்க வாய்ப்பில்லை என்றும் வாதிடப்பட்டது.
ஆனால், சிபிஐ தரப்பு வழக்கறிஞரும் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தரப்பும் ஆஜராகி, செல்வாக்கு மிக்க இவர் ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்றும், இவருக்கு கடுமையான நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் வாதிட்டனர். வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ஆயுள் தண்டனை வரை வழங்கக்கூடிய கடுமையான குற்றம் இது எனக் கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
