தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் தொடக்கம் மட்டுமே: சோனம் வாங்சுக் கருத்து

 

புதுடெல்லி: “தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே” என சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்று தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், போராட்ட களத்தில் இருந்த சோனம் வாங்சுக்கை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி டெல்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கடந்த 23ம் தேதி நள்ளிரவு ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று லடாக் திரும்பும்முன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய சோனம் வாங்சுக் அளித்த பேட்டியில், “ 100 ஆண்டுகளுக்கு முன் காந்தியின் அகிம்சை வழி போராட்ட கொள்கை எவ்வளவு பொருத்தமானதாக இருந்ததோ, அது தற்போதும் பொருத்தமாக உள்ளது” என்றார். தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மட்டுமே போதுமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த சோனம் வாங்சுக், “தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இந்த முடிவு அர்த்தமுள்ளதாக மாறும். அபபடி மாறவில்லையெனில் அர்த்தமற்றதாகி விடும். சீர்திருத்தங்கள்தான் நாட்டை மேம்படுத்தும். அவற்றை நாம் செய்ய முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories: