பின்தொடர்வோர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு; சிஜேபி வெற்றியை தொடர்ந்து இ20 ஜனதா கட்சிக்கு வரவேற்பு: கட்கரியின் எத்தனால் கலப்புக்கு எதிராக போராட திட்டம்

 

புதுடெல்லி: இளைஞர்கள் மற்றும் கரப்பான்பூச்சிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துக்களை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஊடக பிரசாரம் துவக்கப்பட்டது. நையாண்டிக்காக துவக்கப்பட்ட இந்த பிரசாரத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தான், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மாணவர்கள் தற்கொலை விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து, நிதின் கட்கரியின் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு கொள்கைக்கு எதிராக போராட, இ20 ஜனதா கட்சி சமூக வலைதளத்தில் துவக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்கும் வகையில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பது என்ற கொள்கை முடிவை ஒன்றிய அரசு எடுத்தது. தற்போது பெரும்பாலும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் தான் விற்கப்படுகிறது. இதனை பயன்படுத்துவதால் வாகன இன்ஜின் சேதம் அடைகிறது, அடிக்கடி பழுது ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்கள் பழுதாவது மட்டுமின்றி மைலேஜும் குறைகிறது, அதிலும் பழைய வாகனங்கள் மிக அதிக பாதிப்பை அடைகின்றன. நாட்டில் ஓடும் மொத்த வாகனங்களில் ஏறக்குறைய 80 சதவீத வாகனங்கள் எத்தனால் கலப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்படாதவைதான் என வாகன உரிமையாளர்கள், குறிப்பாக டாக்சி ஓட்டுபவர்கள் கூறி வருகின்றனர். எனவே, எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலை விற்பனை செய்ய வலியுறுத்தி இ20 ஜனதா கட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்துக்கு திடீர் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த எக்ஸ் கணக்கு 2024 மே மாதம் துவக்கப்பட்டிருந்தாலும், நேற்று சில மணி நேரத்திலேயே பின்தொடர்வோர் எண்ணிக்கை 54,000ஐ நெருங்கியது.

எத்தனால் கலப்பு கொள்கையை திரும்பப் பெற வேண்டும் அல்லது எத்தனால் கலக்காத பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும். மேலும், எத்தனால் கலப்பு பெட்ரோலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாக கட்கரி வாக்குறுதி அளிக்கும் வீடியோ கிளிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இ20 கலக்காத பெட்ரோல் விநியோகத்தை வலியுறுத்தி சுற்றுலா வாகனங்கள், டாக்சி இயக்குபவர்கள் டெல்லியில் ஆகஸ்ட் 4ம் தேதி பேரணி நடத்த இருக்கின்றனர். இதற்கு இந்த கட்சி ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதின் கட்கரியின் எத்தனால் கலப்பு கொள்கைக்கு எதிரான இயக்கமாக இது உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Related Stories: