* போலீசார் பேச்சுவார்த்தை
* விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தில், கோயில் திருவிழா தொடர்பான பிரச்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஊர் பொதுமக்களுக்குச் சொந்தமான இக்கோயிலில், முதல்நாள் காப்பு கட்டும் திருவிழா தனக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி வரும் அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்று, அதில் காப்பு கட்டுதல் உள்பட அனைத்து திருவிழாக்களையும் ஊர் பொதுமக்கள் சார்பில்தான் நடத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் தீவிரமாகச் செய்து வந்தனர். இதனை அறிந்த அந்தத் தனிநபர், காப்பு கட்டும் திருவிழாவை நான்தான் நடத்துவேன், இதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளேன் எனக் கூறி காப்பு கட்டுவதைத் தடுத்து நிறுத்தித் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சின்னக்கண்டியங்குப்பம் பொதுமக்கள், நேற்று திடீரென விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் சந்துரு மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இப்போராட்டம் காரணமாக விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. மேலும், காலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.
