*விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலம் : பழங்குடியின சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி பயில தடையாக உள்ள சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வலியுறுத்தி, பழங்குடி மக்கள் நலச்சங்கம் சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பழங்குடியின மக்கள் நல சங்க மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் சண்முகம், மாயவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
பழங்குடியின மக்களின் பிள்ளைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உயர்கல்வி கற்பதற்கும், அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் சாதி சான்றிதழ் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
இருப்பினும், சாதி சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், பழங்குடியின மக்களுக்கு எவ்வித தாமதமுமின்றி விரைந்து சாதி சான்றிதழ் வழங்கிடக் கோரி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
சீருடையில் மாணவர்கள் வந்ததால் அதிர்ச்சி
பள்ளி மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோட்டாட்சியர், பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள், பள்ளி குழந்தைகளை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்டார்.
நாங்கள் பலமுறை இதுபோல மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாமலும் பள்ளியில் வழங்கப்படும் நலத்திட்டங்களை பெற முடியாமலும் உள்ளது, என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர், தயவு செய்து பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள், என கூறினார்.
இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற்றினர். அதன் பிறகே கோட்டாட்சியர் வெங்கடேசன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை போராட்டத்திற்கு அழைத்து வரக்கூடாது, என பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதை தொடர்ந்து பழங்குடி மக்கள் நல சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
