ரூ. 3 கோடி பணம் பெற்ற விவகாரம் பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்: அமலாக்கத்துறை அறிக்கையால் பரபரப்பு

கொச்சி: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக்காலத்தில், அதாவது 2018 – 19 காலகட்டத்தில், சி.எம்.ஆர்.எல்., எனப்படும், ‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட்’ என்ற நிறுவனம், பினராயி விஜயன் மகள் வீணாவின், ‘எக்சலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் செலுத்தியது. அந்நிறுவனத்திற்கு எந்த சேவையையும் வழங்காத நிலையில், பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 2024ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் தீர்ப்பாயத்தில், அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ‘சி.எம்.ஆர்.எல்., நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான சசிதரன் கர்தா, அப்போதைய முதல்வர் பினராயி விஜயனுடன் இருந்த தனிப்பட்ட உறவு காரணமாக அவரது மகள் வீணாவுக்கு எந்த சேவைகளும் பெறாமல் 2.78 கோடி ரூபாய் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்’ என சுட்டிக்காட்டியுள்ளது.

இது பினராயி விஜயன் மகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பினராயி விஜயன் நிராகரிப்பு: தனது மகள் வீணாவுக்கு சிஎம்ஆர்எல் நிறுவனம் வழங்கிய பணம் குறித்த அமலாக்கத் துறை அறிக்கையை பினராயி விஜயன் நிராகரித்தார். அவர் கூறுகையில்,’ஊடகங்களில் வந்தால் அது உண்மையாகிவிடுமா? என்னை குறிவைக்கும் பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது. இதுபோன்ற பல விஷயங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்’ என்றார்.

Related Stories: