மோடி அரசை அகற்றும் நேரம் வந்து விட்டது: எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து

* மல்லிகார்ஜூன கார்கே (காங். தேசிய தலைவர்): தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, அரசு மீது தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்திய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. இது உண்மையின் வெற்றி, பிரதமர் மோடியின் பிடிவாதத்திற்கு கிடைத்த தோல்வி. இறுதியாக, இந்திய மாணவர்களின் குரல் ஆணவம் பிடித்த அதிகாரத்தின் வாசலை அடைந்துள்ளது.

ராகுல் காந்தி (மக்களவை எதிர்க்கட்சி தலைவர்): நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள். உங்கள் அனைவரையும் பார்த்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வீதிக்கு வந்து உறுதியுடன் நின்ற ஒவ்வொரு இளைஞருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தங்கள் எதிர்காலத்திற்காக போராடிய மாணவர்களை கொடூரமாக தாக்கியதற்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். சமூகத்தின் பிற பிரிவினரான விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இந்த அரசால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது இதுதான்: ஒருவரின் கண்ணியத்திற்காக அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் உறுதியாக நிற்பதில்தான் உண்மையான துணிச்சல் அடங்கியுள்ளது. இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாதீர்கள்.

* கபில் சிபல் (மாநிலங்களவை சுயேச்சை எம்பி): மோடி ஆட்சியில் எந்த அமைச்சருக்கும் முக்கியத்துவம் இல்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு நாட்டை எப்படி ஆள்வது என்று தெரியாது. பயம், கட்டாயப்படுத்துதல், சட்ட நடவடிக்கைகளை வைத்தே நாட்டை ஆட்சி செய்கின்றனர். ஜந்தர் மந்தருக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிய தர்மேந்திர பிரதானைத் தான் அவர்கள் (பாஜ) பாராட்டுகிறார்கள்.

* கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர்): தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இனி வினாத்தாள் கசிவை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறேன்.

* எம்.ஏ.பேபி (மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்) : இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. இது முதல்படி மட்டுமே. தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். மாணவர் விரோத, வணிகமயமான மற்றும் வகுப்புவாதப் போக்குடைய தேசியக் கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வேண்டும்.

* சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்): அச்சமின்றி ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியாக நின்று, அநீதிக்கு எதிரான தார்மீகப் பொறுப்பை ஏற்க அரசை நிர்பந்தித்த இந்த போராட்டம், ஜனநாயகத்தின் வலிமைக்கு ஒரு சான்றாகும். இது நாட்டின் இளைஞர் சக்தியின் ஒற்றுமைக்குக் கிடைத்த பெரும் வெற்றி.

* கிரண் ரிஜிஜூ (ஒன்றிய அமைச்சர்): ஒரு வலுவான தேசம் அதன் கல்வி முறையால் வரையறுக்கப்படுகிறது. தனது பொது வாழ்வு முழுவதும் தர்மேந்திர பிரதான் இந்த எண்ணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.

Related Stories: