மும்பை: ஸ்வைன் ஃபுளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி, மும்பையில் நடைபெறவுள்ள மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியின் போது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் ஆஸ்துமா தாக்குதலுக்கு உள்ளாகி அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த மூத்த பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி (74), மும்பையில் நடைபெறவுள்ள மாணவர் போராட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், அவருக்கு ஸ்வைன் ஃபுளூ (பன்றி) காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, 102 டிகிரி வரை கடும் காய்ச்சல் நிலவுவதால், மும்பை போராட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாது என அவரது நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவரது குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், ‘சபானா ஆஸ்மி இன்று (நேற்று) போராட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது, ஆனால் அவருக்கு 102 டிகிரி காய்ச்சலுடன் ஸ்வைன் ஃபுளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் பூரண ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்’ என்று கூறியுள்ளனர். முன்னதாக, டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன் கடந்த 14ம் தேதி, 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக்கை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு சபானா ஆஸ்மி வலியுறுத்தியிருந்தார்.
பின்னர் மேதாந்தா மருத்துவமனையில் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட நிலையில், தற்போது ஸ்வைன் ஃபுளூ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சபானா ஆஸ்மி தீவிர மருத்துவ கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வருகிறார்.
