வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

 

கடலூர்: வெகுவாக குறைந்துவரும் நீர்மட்டம் காரணமாக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் உள்ள வீராணம் ஏரி 39 சதுர கி.மீ பரப்பும், 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. வீராணம் ஏரியின் தண்ணீர் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதி டெல்டா பாசனத்திற்கும், சென்னை குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏரியில் இருந்து சராசரியாக 73 கன அடி தண்ணீர் தினமும் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி மாதம் டெல்டா பாசனத்திற்கு முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில், சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு நிரப்பப்பட்டது.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் சரிந்து வருவதால், அவ்வப்போது சென்னை குடிநீர் தேவைக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு கீழணையில் இருந்து வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 8ம் தேதி சென்னை குடிநீருக்காக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, 10 நாட்களாக ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. ஆனாலும் கடந்த 20ம் தேதி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.1 அடியாகவும், 530 மில்லியன் கன அடி தண்ணீரும் இருந்த நிலையில், நேற்று 42.01 அடியாகவும், 490 மில்லியன் கன அடியாகவும் குறைந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகிய ஏரிகளிலும் போதிய நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் கவலையில் உள்ளனர். வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையிலிருந்து அவ்வப்போது தண்ணீர் திறந்து நிரப்பினாலும் சென்னை குடிநீர் தேவையை சில மாதங்கள் கூட சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

Related Stories: